Friday, November 5, 2010

காலை   நேர பனித்துளி என் போர்வையை தொட்டு வெகு நேரமாயிற்று .........ஆனால் எனக்கோ என் இமைகளையும் போர்வையையும் விலக்க மனமில்லை ....."தூங்கியது போதும் இன்னிக்கு கனத்த நாள் , சீக்கிரம் எழுந்துரு ,முடிக்க வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஒரு மணிக்குள் வீட்டிற்கு பத்திரமாக வந்து சேரனும்" என்று அதட்டலும் ,அக்கறையுடனும் சொன்னாள் அம்மா .
                                                                       அம்மாவின் குரலில் வழக்கத்திற்கு மாறான  சந்தோஷம் தெரிந்தது.... .அந்த சந்தோஷம் சுயநலமானது என்பதனால் அதை மறைக்க திண்டாடி கொண்டுயிருந்தாள்...மறைத்தும் விட்டாள்.
                                         .கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு  அவள் சொன்னவற்றுக்கு அர்த்தம்  தேடினேன் ."இன்னிக்கு கனத்த நாள் ".....மனதின் வலி பொய் புன்னகையுடன் எட்டி பார்த்தது .என் மனதின் கனம் யாருக்கு புரிய போகிறதோ ....ஒரு வழியாக மனதை திடபடுத்திக்கொண்டு  என் அறையை  விட்டு வெளியே வந்தேன்... .அப்பா வழக்கம் போல பேப்பர் படித்து கொண்டு இருந்தார் .அவரிடம் எந்த சலனமும் இல்லை .மெதுவாக அறையின் மூலையில் இருந்த என் பாட்டியை பார்த்தேன் .....
                                                          தன்   கொட்டிய         வெள்ளை முடியை கருப்பும் வெள்ளையும் சேர்ந்த இடிமுடியை வைத்து கொண்டை போட்டுக்கொண்டு இருந்தாள்......அவளின் முகத்திலும் சலனம் இல்லை .பாட்டி 'குளித்து விட்டு வா ஜடை பின்னி விடுகிறேன் என்றாள்.அவளது  குரலும் தெளிவாக இருந்தது .அரை மணி நேரத்தில் அவளருகே ஆஜர் ஆனேன் ...
                 பாட்டி சீப்பை என் தலையில் வைத்து முடியை பின்னே இழுக்க என் நினைவுகளும் பின்னோக்கி போயிற்று .அப்போது எனக்கு ஐந்து வயது .அப்பாவிற்கு வேலை கிடைத்திருந்தது .அம்மா தன் கணவனை பிரிய போகிறோம் என்ற கவலையிலும் வாழ்க்கையின் தரம் உயர போகின்றது என்ற சந்தோஷத்திலும் இருந்தாள் .இரு எதிர்மறை உணர்ச்சிகளும் சங்கமிக்க கொஞ்சம் குழம்பவும் செய்தாள்.எனக்கு அம்மா ஏன்  அழுகிறாள் என தெரியாமலே  அழுதுகொண்டு இருந்தேன்.. .அப்போது பாட்டி தான்  எங்கள் இருவரையும் அணைத்துக்கொண்டு சமாதானபடுத்தினாள் . .. சிறுவயதிலே கணவனை விபத்தில் பறிகொடுத்து பின்பு முப்பது வருடமாக மகன் தான் உலகம் என்று நினைத்து ,வாழ்ந்துக்கொண்டு இருக்கும் வாழ்க்கையை மட்டும்  படித்த பாட்டியை பார்த்து முடிவெடுத்தேன் இனி அழுவதில்லை என்று...... .இரண்டு வருடம் கழித்து அம்மாவும் அமெரிக்கா சென்று விட்டாள்,என்னை பாட்டியின் கையில் ஒப்படைத்துவிட்டு ......அன்றில் இருந்து பாட்டியின் அரவணைப்பில் தான் வளர்த்தேன்...... .ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகும் பள்ளிக்கு ஐந்து மணிக்கு பிள்ளைகளை எழுப்பி ,தங்களது வேலைகளையும் ,பிள்ளைகளின் வேலைகளையும் அரைகுறையாக முடித்து..., தங்களது டென்ஷன்களையும் கோபத்தையும் புத்தக மூட்டையோடு ஏற்றி அனுப்பும் பெற்றோர்களுக்கு என் பாட்டி முற்றிலும் வேறுபட்டவள் .தன் சமையல் வேலைகளை முடித்து விட்டு எனக்கு பள்ளிக்கு கிளம்ப தேவையானவற்றை  தயார் செய்துவிட்டே எழுப்புவாள்.பின்பு பள்ளி வாகனத்தில் என்னை ஏற்றி விட்டு ,நானும் வாகனமும் அவள் பார்வையை விட்டு விலகும் வரை கை அசைத்து விடைக்கொடுப்பாள் என்றுமே அவள் கோபபட்டோ,கவலைபட்டோ நான் பார்த்தது இல்லை..... .அவள் தனது மற்ற பேரக்குழந்தைகளை கொஞ்சும் போது பொறாமை என்னை ஆட்கொள்ளும் .எத்தனையோ தடவை அந்த கோபத்தை என் பாட்டியிடம் தவணை  முறையில் காட்டிருகிரேன் ஆனால்  அவளிடம் இருந்து அன்பு என்ற லாபத்தை மட்டுமே அனுபவித்தேன்...... .இருந்தும் அவளிடம் எனக்கு பிடிக்காத விஷயம் ஒன்று இருந்தது .எனக்கு ஜடை பின்னிவிடுகிரேன் என்ற பெயரில் எண்ணெய் அபிஷேகம் செய்து விடுவாள் .எத்தனையோ தடவை அவளை கோபத்தில் திட்டி இருக்கிறேன்.ஆனால் ஒவ்வொரு நாளும் இதே தப்பை தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டு இருந்தாள் .நான் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் அம்மாவும் அப்பாவும் இந்தியா வந்து விட்டார்கள் .
                                                          என் உறவீனர்கள் பெண்ணை இனிமேல் தனியாக ..,அதுவும் வயதான பாட்டியிடம் வளரவிடுவது சரியில்லை மேலும்.. காதல் ,திருமணம் என சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் ..,நம் குடும்ப மானமே போய்விடும் என அறிவுறுத்தியும் அச்சுறுத்தியும் கூறியதால் தான் என் பெற்றோர் இங்கு வந்தார்கள் என எனக்கு பின்புதான் புரிந்தது ... இப்போது கூட அவர்களின் கவனம் கடமையை செய்வதிலேயே இருந்ததை நினைக்கும் போது வாழ்கை ஒரு நிமிடம் கசக்கவே செய்தது ...வாழ்க்கையின் தரம் உயர வெளிநாட்டிற்கு போய்தான் ஆகவேண்டுமா,நம் நாட்டில் என இல்லை என யாரோ ..,எப்போதோ கேட்டது நினைவுக்கு வந்தது .......இவ்வாறாக என் சிந்தனை ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் எறும்பு கூட்டம் போல்  சென்றுக்கொண்டு  இருந்தது .......
                                                                  கடமை ..,அன்பு ....,அரவணைப்பு என்னும் வாழ்க்கையின் ஆதாரங்களை என் பாட்டியிடம்  பார்த்தேன் .....வருடத்திற்கு ஒருமுறை வரும் பெற்றோர்களிடம் கடமை மட்டும் தெரிந்தது ......சீப்பு முடியோடு சேர்த்து என் முதுகையும் இழுத்துவிட" ஆ...... "என சத்தம் போட்டுக்கொண்டே நிகழ் உலகத்திற்கு வந்தேன் ...
                                      கண்ணாடியை எடுத்து என் முகத்தை பார்த்தேன்....,முகம் சற்றே வெளுத்திருந்தது ...,கண்களில் சோகம் கண்ணீரை சுரக்க முயற்சி செய்துக்கொண்டு இருந்தது என்றும் ஈரம் படிந்து இருக்கும் உதடு வெடித்திருந்தது ...ஆனாலும் கண்ணீர் மட்டும் வரவில்லை ....எப்படி வரும்.... கல் மனம் கொண்டவளாக என் பாட்டி என்னை  வளர்த்து விட்டாளே ...,கண்ணாடியை சாய்த்து என் தலையை பார்த்தேன்  எண்ணையை பாட்டி தொடவே இல்லை என்பதை உணர்ந்தேன் ....,கண்ணாடியை இன்னும் சற்று சாய்த்து பாட்டியின் முகத்தை பார்த்தேன் ......எதையோ யோசித்தவாறு தலை பின்னிக்கொண்டு இருந்தாள் ... சற்று நேரத்திற்குள் அனைவரும் கிளம்பிவிட நானும்  என் கைப்பையை எடுத்து கொண்டு காரில் ஏறினேன் ...பாட்டி என் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள்...அம்மா அப்பாவின் அருகில் உட்கார்ந்து கொள்ள அப்பா காரை சாலையில் செலுத்த ...,நான் இறுக்கத்துடன் பயணிக்க ஆரம்பிக்க ஆரம்பித்தேன் ...,சரியாக இரண்டு மணி நேரம் ...,முதியோர் இல்லத்திற்கு வந்தடைந்து விட்டோம் ...
                                             காரின் கதவை திறந்து இறங்கும் போது தான் எனக்குள் அந்த கேள்வி உதித்தது ...பாட்டி என் மேல் அன்பு வைத்திருக்கிறாள் என்பது எனக்கு தெரியும் ....அதை என்னை சீவி சிங்காரித்து...,அழகு பார்த்து வளர்த்து காண்பித்து விட்டாள் ...ஆனால் அவள் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறேன் என எப்படி புரிய வைப்பது ?அதை காண்பிக்க எனக்கு ஒரு சந்தர்பம் அமையவே இல்லையே ...?இப்போது என்ன செய்வேன் ?யோசித்தவாறு நடுங்கும் அவள் கையை பற்றி இல்லத்தின் அறையை வந்து அடைந்தேன் ......
                                                             சுற்றும்  முற்றும் பார்த்தேன் அவளை போல ஏக்கங்கள் சுமந்த முதியவர்களின் முகம் தான் என் கண்ணில் பட்டது ....,ஏன் எந்த கேள்வி எனக்கு முன்பே நினைவில் வரவில்லை ...?என என்னை  நானே கடிந்து கொண்டேன் ....அழுதாவது என் அன்பை கட்டலாம் என்றாள் அழுகையும் வரவில்லை ...,என் அப்பா அவளை நடத்தி  சென்று அவளுக்கு என்று  ஒதுக்க பட்ட கட்டிலில் அவளை உட்கார செய்தார்....அம்மா நினைத்ததை சாதித்த சந்தோசஷத்தில் இருந்தாள் ....,இம்முறை அவளால் அதை மறைக்க முடியவில்லை ...,இறுதியாக போலியாக வந்த கண்ணீரை துடைத்து கொண்டு அம்மாவும் ..,அப்பாவும் விடை பெற்று கொண்டு வெளியே சென்றார்கள் ...,நான் போகிறேன் என்று உண்மையை சொல்லவா ...,போய் வருகிறேன் என பொய் சொல்ல வா என எனக்குள்ளையே போராடிக்கொண்டு இருந்தேன் ..,இம்முறையும் பாட்டி தான் எனக்கு உதவினாள்...,ஆனால் வார்த்தை வரவில்லை ......கை மட்டும் அசைத்தாள்......
                                                          'என் அன்பு உனக்கு புரிய வில்லையா பாட்டி' என்று கோபத்துடனும் வருத்ததுடனும் நின்றுகொண்டு இருந்தேன் ...,என் முகத்தையே கண் கொட்டாமல் பார்த்தாள்...,முகத்தில் என்ன தெரிய போகிறது ...,இரண்டு நாட்களில் கணவுடனும் மகளுடனும் பத்திரமாக அமெரிக்கா போய் சேரும் முனைப்புடன் இருக்கும் மருமகளின் சாயல் தான் தெரிந்திருக்கும் ....
                                                                           முகத்தை பார்த்தவளுக்கு பிறரின் மனதை பார்க்கும்  சூட்சமம் தெரிந்திருந்தால் ...,அவளுக்கு புரிந்திருக்கும் ...உணர்ச்சிகளை வெளிக்காட்டாத வகையில் நான் அவளின் பிம்பம் என்று ......
                                                                  

No comments:

Post a Comment